- நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, "இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?" எனக் கேட்டார். "நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) - நூல்: புஹாரி)
- "பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) - நூல்: புஹாரி)
- "உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்." என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) / அபூ ஹுரைரா(ரலி) - நூல்: புஹாரி)
- "தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மக்கள், "(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்" என்று கூறினார்கள்.
மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்?" அல்லது "அதை அவர் செய்யாவிட்டால் (என்ன செய்வது?)" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், "பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவட்டும்" என்றார்கள்.
மக்கள், "(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், "அப்போது அவர் 'நல்லதை' அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்" என்றார்கள்.
"(இதையும்) அவர் செய்யாவிட்டால்?" என்று கேட்டதற்கு, நபி(ஸல்) அவர்கள், "அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள்.
(அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) - நூல்: புஹாரி)

0 comments:
Post a Comment